புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 19-07-2018
உத்தரவு பிறப்பித்த நாள் : 05-09-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 28/2018.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், குருசாமிபாளையம் அஞ்சல், பில்லநல்லூர், வாஸ்து நகர், இலக்கம் 15/1J(1) -ல் வசிக்கும் பெருமாள் மகன் பி சதாசிவம் - முறையீட்டாளர்
- எதிர்-
01. ராசிபுரம், ஆர் கவுண்டம்பாளையம், கலை ப்ளாசா, வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் எதிரில், உள்ள தி நோபல் மோட்டார்ஸ், அதன் உரிமையாளர்
02. நாமக்கல், சேலம் பிரதான சாலை, பொன் நகர், ஏபிஐ பிளாசா -ல் இருக்கும் தி நோபல் மோட்டார்ஸ் உரிமையாளர், எஸ். எம். பழனிச்சாமி மகன் இபி சதீஷ்குமார் - எதிர் தரப்பினர்கள்
ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 இந்த புகாரில் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986, பிரிவு 12 -ன்படி புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திரு எஸ். தியாகராஜன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு ஆர் சதீஷ்குமார் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலை பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 08-08-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-10, முதலாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, மற்றும் முறையீட்டாளர் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தான் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன் என்றும் கடந்த 12-02-2018 ஆம் தேதியில் முதலாம் எதிர்த்தரப்பினரின் கடையில் Honda Unicorn 150 cc என்ற வகை இருசக்கர வாகனத்தை வாங்கினேன் என்றும் இதற்காக ரூ 24,500/- ஐ முதலாம் எதிர்த்தரப்பினரிடம் செலுத்தினேன் என்றும் பின்னர் மாதம் ரூ 3,670/- வீதம் செலுத்தும் வகையில் முதல் எதிர் தரப்பினர் மூலமாகவே மோட்டார் சைக்கிள் கோர் பைனான்ஸ் மூலம் கடன் பெற்றேன் என்றும் முதல் மாத தவணை தொகையாக ரூ 3,670/- ஐ எதிர் தரப்பினரிடம் செலுத்தி உள்ளேன் என்றும் தம்மால் விலைக்கு பெறப்பட்ட இரு சக்கர வாகனத்திற்கு வாகனத்தின் Engine No: KC 31 E 8202391 மற்றும் Chasis No: ME4KC311BJ 8202268 ஆகும் என்றும் மேற்கண்ட வாகனத்தை வாங்கிய மூன்றாவது நாளிலேயே வாகனத்தின் Chain-ல் இருந்து பலத்த சத்தம் வர ஆரம்பித்தது என்றும் உடனடியாக முதலாம் எதிர்த்தரப்பினரிடம் சென்று கூறியபோது அங்கு அவர்கள் செயினில் கிரீஸ் தடவி இனி சத்தம் வராது என்று கூறி அனுப்பி விட்டார்கள் என்றும் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அதே குறைபாடு ஏற்பட்டு எதிர் தரப்பினிடம் சென்று கூறிய போது தேனியில் சில வேலைகளை செய்து திருப்பித் தந்த வாகனத்தை திருப்பித் தந்தார்கள் என்றும் மீண்டும் வாகனத்தில் அதே குறைபாடும் வாகன எஞ்சினில் பெருத்த அதிர்வும் gear மாற்றுவதில் சிரமமும் ஏற்பட்டதோடு பயண தூரத்தை காட்டும் அளவுகோல் வேலை செய்யவில்லை என்றும் இதனால் முதலாவது இலவச வாகன சேவை செய்யப்பட வேண்டிய நாட்களுக்கு முன்னதாகவே 02-03-2018 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரிடம் முதலாவது இலவச வாகன சேவையை செய்து தருமாறு குறைபாடுகளை கூறி வாகனத்தை வழங்கினேன் என்றும் முதலாவது வாகன சேவையை முடித்து என்னிடம் வாகனத்தை கொடுத்த பின்னரும் அதே பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தன என்றும் 05-03-2018 ஆம் தேதியில் மீண்டும் முழு பரிசோதனைக்கு வாகனத்தை வழங்கியும் எவ்வித பிரச்சனைகளும் வாகனத்தில் சரி செய்யப்படவில்லை என்றும் கடந்த 19-03-2018 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரிடம் வாகனத்தை கொண்டு சென்று காட்டிய போது சில குறைபாடுகள் உள்ளதை ஒப்புக்கொண்டு சரி செய்து தருவதாக தெரிவித்தார்கள் என்றும் வாகனத்தின் தயாரிப்பில் குறைபாடுகள் இருக்கலாம் அல்லது புதிய பாகங்களை முதலாம் எதிர் தரப்பினர் தமது வாகனத்தில் இருந்து எடுத்து விட்டு பழைய பாகங்களை பொருத்தி புனரமைப்பு செய்து இருக்கலாம் என்றும் இந்நிலையில் வாகனத்தை தொடர்ந்து இயக்கினால் தமது உயிருக்கு ஆபத்து நிலை உள்ளது என்றும் அல்லது விபத்து ஏற்பட்டு மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்றும் கருதி கடந்த 21-03-2018 ஆம் தேதி எதிர் தரப்பினரிடம் வாகனத்தை ஒப்படைத்து விட்டு தான் செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறு கேட்டேன் என்றும் அதற்கு உயர் அலுவலர்களிடம் கேட்டு கூறுவதாக தெரிவித்தார் என்றும் சிறிது நாட்கள் கழித்து தம்மை சமாதானம் செய்ய தமது மருத்துவமனைக்கு முதலாம் எதிர் தரப்பினரின் பிரதிநிதிகள் வந்தார்கள் என்றும் அப்போது வேறு வாகனங்களில் இருந்து பாகங்களை எடுத்து தமது வாகனத்தில் பழுதுபட்டுள்ள பாகங்களுக்காக மாற்றி தருவதாக தெரிவித்தார்கள் என்றும் இவ்வாறு கூறிய போது தான் முதலாவது எதிர் தரப்பினர் வாகனங்களை விற்பனை செய்வதற்கு முன்பாக புதிய வாகனங்களில் உள்ள சில பாகங்களை எடுத்து பழுதுபட்ட வாகனங்களுக்கு கொடுத்து விடுவதால்தான் வாகனங்களில் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை அறிந்து தமது வாகனத்திலும் இத்தகைய குறைபாடு காரணமாக எதிர் தரப்பினரின் நேர்மையற்ற வணிக நடைமுறை காரணமாகவே தமது வாகனத்திலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தேன் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் தமக்கு குறைபாடு உடைய வாகனத்தை விற்பனை செய்துள்ளார் என்றும் தமக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏற்பட்ட பழுதுக்கு எதிர் தரப்பினர் அதில் உள்ள பாகங்களை எடுத்து வேறு வாகனங்களுக்கு மாற்றி உள்ளது என்றும் இத்தகைய எதிர் தரப்பினரின் செயல்கள் நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து முறையீட்டாளர் புகாரை தாக்கல் செய்துள்ளார்.
03. எனவே, தான் எதிர் தரப்பினரிடம் செலுத்திய தொகை ரூ 28.170/- மற்றும் எதிர் தரப்பினரால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 25,000 /-ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த ஆணையம் சரி என கருதும் இதர தீர்வுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
05. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல தங்களிடம் இருசக்கர வாகனத்தை விலைக்கு வாங்கினார் என்பது உண்மை என்றும் தாங்கள் ஹோண்டா நிறுவனத்தின் விநியோகிஸ்தர் என்றும் தங்களிடம் இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக ரூ 24,500/- செலுத்தினார் என்றும் மீத தொகை ரூ 64,000/- ஐ ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தின் மூலமாக கடனாக பெற்றிருந்தார் என்றும் தங்களிடம் வாகனத்தை வாங்குவதற்கு முறையீட்டாளர் அவரது மெக்கானிக்கை அழைத்து வந்து சோதனை செய்து பார்த்து பின்பு வாகன முன்பதிவு செய்துவிட்டு பின்னர் வாகனத்தை எடுத்துச் செல்லும் போதும் தக்க பரிசோதனை செய்து வாங்கினார் என்றும் தங்கள் வாகனத்தை நல்ல நிலையில் அவருக்கு வழங்கினோம் என்றும் முறையீட்டாளர் கூறுவது போல வாகனத்தில் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும் அவர் இலவச வாகன சேவைக்காக வந்தபோது குறிப்பிட்ட குறைபாடுகளும் சோதனை செய்தபோது வாகனத்தில் இல்லை என்றும் தங்கள் தரப்பில் வாகனத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தங்கள் தரப்பில் முறையீட்டாளரை அவரது மருத்துவமனைக்கு சென்று புகாரில் கூறியுள்ளது போல பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவரது வாகனத்துக்கு முதலாவது இலவச சேவையை செய்த பின்னர் அவருக்கு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு தகவல் அளித்த போது வாகனத்தை பெற்றுச் செல்ல முடியாது- தமக்கு புதிய வாகனம் வேண்டும் அல்லது மேற்படி வாகனத்திற்கு உண்டான முழு தொகையும் தருவதாக கூறினால் மட்டுமே நிறுவனத்திற்கு வந்து வாகனத்தை எடுத்துச் செல்வேன் - இல்லையென்றால் புகார் தாக்கல் செய்வேன் என்று கூறினார் என்றும் தீய லாபம் அடையும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் தங்கள் வாகனத்தை நல்ல நிலையில் வழங்கி புதிய வாகனத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை தெரிவித்த பின்னர் அவர் நிபந்தனைகளை பின்பற்றாமல் சரி வர வாகனத்தை கையாளவில்லை என்றும் வாகனத்தில் எந்த விதமான உற்பத்தி குறைபாடுகளும் கிடையாது என்றும் தேவையான தரப்பினர்களை புகாரில் முறையீட்டாளர் சேர்க்கவில்லை என்றும் அவர் கூறும் குற்றச்சாட்டுகளை அவரே தக்க சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் முதலாவது வாகன சேவைக்கு முன்பு ஒரு முறை தங்களிடம் வாகனத்தை வழங்கி குறிப்பிட்ட பழுதுகளை கூறி சரி செய்ய தெரிவித்த போது தங்கள் தரப்பில் அவற்றை சரி செய்து கொடுத்ததாக புகார் கூறியுள்ளது கற்பனையானது என்றும் தங்கள் தரப்பில் ஒருபோதும் சேவை குறைபாடு புரியவில்லை என்றும் முறையீட்டாளர் கேட்டுள்ள பரிகாரங்கள் அவருக்கு கிடைக்கத்தக்கதல்ல என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் தெரிவித்து எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
05. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடுபுரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர்கள் குறைபாடான சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
06. முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல அவர் தங்களிடம் இருசக்கர வாகனத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இரண்டாம் எதிர் தரப்பினரை புகாரில் இணைக்க முறையீட்டாளரால் விண்ணப்பிக்கப்பட்டு அந்த மனுவும் அனுமதிக்கப்பட்டு முறையீட்டாளரால் கூடுதல் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு அதில் இரண்டாம் எதிர் தரப்பினர் தான் முதலாம் எதிர் தரப்பினர் நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் எதிர் தரப்பினர் தாம் தி நோபல் மோட்டார்ஸ் நாமக்கல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறி ராசிபுரம் கிளையின் துணை விற்பனை மேலாளர் கலையரசன் என்பவரை இந்த வழக்கை நடத்த அனுமதி அளித்து அங்கீகார கடிதத்தை இந்த ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரின் செய்கைகளுக்கு பகர பொறுப்புடையவர் என்ற முறையில் முறையீட்டாளர் இரண்டாம் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
07. முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் புகாரில் குறிப்பிட்டுள்ளவாறு பணம் செலுத்தி இரு சக்கர வாகனத்தை விலைக்கு வாங்கினார் என்ற சங்கதியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. தம்மால் வாங்கப்பட்ட வாகனத்தில் உற்பத்தி குறைபாடு அல்லது முதலாம் எதிர் தரப்பினர் தம்மால் வாங்கப்பட்ட புதிய வாகனத்தில் உள்ள சில பாகங்களை எடுத்துக்கொண்டு வேறு வாகனத்தில் இருந்து பாகங்களை எடுத்து தமது வாகனத்தில் பொருத்தியதன் காரணமாகவே தமது வாகனத்தில் பழுது ஏற்பட்டது என்று புகாரில் முறையீட்டாளர் குற்றம் சாட்டியுள்ளார். முதலாம் எதிர் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்டு முறையீட்டாளரால் வாங்கப்பட்ட வாகனத்தில் உற்பத்தி குறைபாடு என்றால் வாகனத்தின் உற்பத்தியாளர் தரப்பினராக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய எந்த ஒரு நடவடிக்கையும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள புகாரில் மேற்கொள்ளவில்லை. தம்மால் வாங்கப்பட்ட புதிய வாகனத்தில் உள்ள சில பாகங்களை எடுத்துக்கொண்டு வேறு வாகனத்தில் இருந்து பாகங்களை எடுத்து தமது வாகனத்தில் பொருத்தியதன் காரணமாகவே தமது வாகனத்தில் பழுது ஏற்பட்டது என்பதை நிரூபிக்க தக்க சாட்சியங்களும் சான்றாவணங்களும் முறையீட்டாளரால் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை புகாரில் சொல்லப்பட்டுள்ள வாகனத்தை ஆய்வகத்துக்கு அனுப்பி முறையீட்டாளர் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர் எத்தகைய நடவடிக்கைகளையும் இந்த ஆணையத்தின் முன்பாக மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் புகாரில் சொல்லப்பட்டுள்ளவாறு முதலாம் எதிர் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்டு முறையீட்டாளரால் வாங்கப்பட்ட இரு சக்கர வாகனத்தில் உற்பத்தி குறைபாடு அல்லது முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளரால் வாங்கப்பட்ட புதிய வாகனத்தில் உள்ள சில பாகங்களை எடுத்துக்கொண்டு வேறு வாகனத்தில் இருந்து பாகங்களை எடுத்து முறையீட்டாளரின் வாகனத்தில் பொருத்தியதன் காரணமாகவே தமது வாகனத்தில் பழுது ஏற்பட்டது என்று முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது தக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
08. கடந்த 21-03-2018 ஆம் தேதியில் முறையீட்டாளர் புகாரில் சொல்லப்பட்டுள்ள வாகனத்தை முதலாம் எதிர் தரப்பினரின் பணிமனையில் பழுது நீக்க வழங்கியுள்ளார் என்பதை முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 9 ஆம் சான்றாவணமான எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறு எதிர் தரப்பினரிடம் வாகனத்தை வழங்கிய பின்னர் தற்போது வரை தமது வாகனம் அங்கேயே உள்ளது என்று முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த 21-03-2018 ஆம் தேதியில் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல வாகனத்தை சில பழுதுகளை குறைபாடுகள் வாகனத்தில் இருப்பதாக கூறி அதனை சரி செய்யுமாறு தங்களிடம் ஒப்படைத்தார் என்றும் வாகனத்தை பரிசோதனை செய்த பின்னர் எந்த ஒரு பழுதும் இல்லை என்று தங்களால் அறியப்பட்டது என்றும் வாகனத்தின் எஞ்சின் ஆயில் மற்றும் வாசர் ஆகியவற்றை மாற்றி விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு முறையீட்டாளரிடம் தெரிவித்த போது புதிய வாகனம் தர வேண்டும் அல்லது வாகனத்துக்குரிய தொகையை வேண்டும் என தெரிவித்தார் என்றும் எதிர் தரப்பினர் பதில் உரையில் கூறியுள்ளார். இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் கடந்து 21-03-2018 ஆம் தேதி முதல் முறையீட்டாளருக்கு சொந்தமான புகாரில் சொல்லப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் முதலாம் எதிர் தரப்பினரிடம் இருந்து வருகிறது என்பதாகும்.
09. முதலாம் எதிர்த்தரப்பினரிடம் முறையீட்டாளர் வாகனத்தை ஒப்படைத்த போது நுழைவாயில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனம் சரி செய்யப்பட்ட பின்னர் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அல்லது நமது கோரிக்கையை தெரிவிக்க வேண்டியது முறையீட்டாளரின் கடமையாகும். வாகனத்தில் குறைபாடு இருப்பதால் தமக்கு புதிய வாகனம் வழங்க வேண்டும் அல்லது செலுத்திய தொகையை வழங்க வேண்டும் என்று கேட்டு எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு கடிதத்தை அல்லது சட்ட அறிவிப்பை முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பவில்லை. முறையீட்டாளரிடம் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டபோது புதிய வாகனம் வழங்க வேண்டும் அல்லது வாகனத்திற்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து வாகனத்தை எடுத்துச் செல்லவில்லை என்று எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும் வாய்மொழியாக அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பார் எனில் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு எழுத்து மூலமாக கடிதம் அல்லது அறிவிப்பை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி இருக்க வேண்டும். முறையீட்டாளரிடம் வாகனத்தை ஒப்படைக்க எதிர் தரப்பினர் மேற்கொண்டதாக சாட்சியங்களும் சான்றாவணங்களும் இல்லை. குறைந்தபட்சம் இந்த ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்ட பின்பு வாகனத்தை எப்போதும் ஒப்படைக்க தாங்கள் தயாராக இருப்பதாக பதில் உரையில் கூட முதலாம் எதிர் தரப்பினர் தெரிவிக்கவில்லை. 21-03-2018 ஆம் தேதி முதல் முறையீட்டாளருக்கு சொந்தமான புகாரில் சொல்லப்பட்டுள்ள இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு அதனை முறையீட்டாளருக்கு ஒப்படைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் முதலாம் எதிர் தரப்பினர் இருந்து வந்துள்ளது நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டிற்கு அவரை நிர்வகிக்கும் இரண்டாம் எதிர் தரப்பினரும் பொறுப்பாவார் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –2
10. எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் முறையீட்டாளருக்கு வழங்கத்தக்க பரிகாரம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. முதலாம் எதிர் தரப்பினரிடம் வாங்கப்பட்ட வாகனத்தின் விலை என்ன என்று எதுவும் முறையீட்டாளரால் புகாரின் குறிப்பிடப்படவில்லை. அதே சமயத்தில் முதலாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையில் வாகனத்திற்காக முறையீட்டாளர் ரூ 24,650/- செலுத்தினார் என்றும் தனியார் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடனாக வழங்கப்பட்ட ரூ 64,000/- செலுத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தெரிய வருவது முதலாம் எதிர் தரப்பினரிடம் முறையீட்டாளர் வாங்கிய வாகனத்தின் விலை ரூ 88,650/- ஆகும் . புகாரில் முறையீட்டாளர் தம்மால் முதலாம் எதிர் தரப்பினருக்கு வாகனத்தை வாங்கிய போது ரூ 24,650/- செலுத்தப்பட்டது என்றும் பின்னர் அவரிடம் முதலாம் மாத தவணை தொகையாக 15-03-2018 ஆம் தேதியில் ரூ 3,670/- செலுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்டவாறு முதலாவது மாத தவணைத் தொகை என்பது முறையீட்டாளருக்கு கடன் உதவி வழங்கிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டதற்கான ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பில் பத்தாவது சான்றாவனம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் முதலாவது மாதத் தவணை தொகையை முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு செலுத்தினார் என்பது தவறான சங்கதி என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. புகாரில் முதலாம் எதிர் தரப்பினர் தமக்கு விற்ற குறைபாடு உடைய வாகனத்தை பெற்றுக்கொண்டு புதிய வாகனம் வழங்க வேண்டும் அல்லது தமது வாகனத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என்று சங்கதிகளை தெரிவித்து விட்டு இந்த கோரிக்கையை பரிகாரமாக முறையீட்டாளர் புகாரில் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளர் நேரடியாகவும் அவரது கடன் உதவி நிறுவனம் மூலமாகவும் முதலாம் எதிர் தரப்பினருக்கு வாகனத்துக்கு ரூ 88,650/- செலுத்தியுள்ளார் என்பது மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்நிலையில் வழக்கின் தன்மையை கருதி எதிர் தரப்பினர்கள் கூட்டாக முதலாம் எதிர் தரப்பினரிடம் உள்ள முறையீட்டாளரின் வாகனத்தின் விலை ரூ 88,650/- மற்றும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கும் இழப்பீடாக ரூ 11,350/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் 03-10-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை மேற்படி இழப்பீட்டுத் தொகை ரூ 1,00,000/- உடன் அதற்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் –3
11. இந்த வழக்கின் தன்மையை கருதி வழக்கின் செலவு தொகைகளை தரப்பினர்கள் அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேறு எந்த பரிகாரங்களும் இல்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. வழக்கின் தன்மையை கருதி எதிர் தரப்பினர்கள் கூட்டாக முதலாம் எதிர் தரப்பினரிடம் உள்ள முறையீட்டாளரின் வாகனத்தின் விலை ரூ 88,650/- மற்றும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கும் இழப்பீடாக ரூ 11,350/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 03-10-2023 ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை மேற்படி இழப்பீட்டுத் தொகை ரூ 1,00,000/- உடன் அதற்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.
02. இந்த வழக்கின் தன்மையை கருதி வழக்கின் செலவு தொகைகளை தரப்பினர்கள் அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 05-09-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 05-02-2018 | முதலாம் எதிர்மனுதாரர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 12-02-2018 | முதலாம் எதிர்மனுதாரர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 12-02-2018 | முதலாம் எதிர்மனுதாரர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 12-02-2018 | எதிர்மனுதாரர் வழங்கிய ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 12-02-2018 | இரு சக்கர வாகனத்தை முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்கியதற்கான குறிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 02-03-2018 | முதலாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட பணிமனை ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 16-03-2018 | முதலாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட பணிமனை ரசீது | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 28-02-2018 | முதலாம் எதிர் தரப்பினரால் வழங்கப்பட்ட வரி இன்வாய்ஸ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 21-03-2018 | முதலாம் எதிர் தரப்பினர் வழங்கிய நுழைவாயில் சீட்டு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 15-03-2018 | முறையீட்டாளருக்கு நிதி நிறுவனம் கொடுத்த தற்காலிக ரசீது | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு பி சதாசிவம், முறையீட்டாளர்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.